துருக்கியில் காஸியண்டெப் நகரில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை மொத்த உயிரிழப்பு 40 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்தின் வெலிங்டன்னில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே நியூசிலாந்தில் கேப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை சந்தித்து வரும் நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்களை கடும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.