அதிமுக அமைச்சர் ஒருவர் வெற்றி பெற்ற உள்ளாட்சி தலைவர்களை மிகவும் தரக்குறைவாகவும், எதிர்கட்சி உள்ளாட்சி தலைவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் செய்ய போகிறோம் என பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே செண்பகபுதூர் என்ற ஊரில் அதிமுக சார்பில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார். அப்போது, "ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்குகளை மாற்றி போட்டதால், சில இடங்களில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளது.
சத்தியமங்கலத்தில் கூட யூனியன் சேர்மனாக திமுகதான் வந்திருக்கிறது. திமுக வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதியைத்தான் கொடுப்போம். தற்போது ஆட்சியில் உள்ளது நமது ஆளும் கட்சி அதிமுக. அதிமுக உறுப்பினர் யூனியன் தலைவராக இருந்தால்தான் அதிக நிதி கொடுப்போம். ஆனால் எதிர்கட்சியான திமுகவில் இருந்து யூனியன் தலைவர் வந்தால் நாம் எதற்கு நிதி கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இது பற்றி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மனான திமுகவைச் சேர்ந்த இளங்கோ நம்மிடம் கூறும் போது, " அமைச்சர் கருப்பணன், அமைச்சர் என்ற பதவியை இழந்து பேசியிருக்கிறார். வாய்கொழுப்போடு பேசும் இந்த பேச்சு சாதாரணமானது அல்ல. உள்ளாட்சி மன்ற தலைவர் முதல் அமைச்சர் வரை பொறுப்பில் இருக்கும் போது, அவர்கள் அரசியல் பொறுப்பில் இருப்பதாக அர்த்தம் இல்லை. அரசின் பொறுப்பில் உள்ளதாகத்தான் அர்த்தம். அவர்கள் பொறுப்பேற்கும் போது இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு இருப்பேன் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள்.
ஆட்சியில் அதிமுக இருந்தாலும், திமுக இருந்தாலும் உள்ளாட்சி மன்ற இடங்களுக்கு தேவையான நிதியை வழங்குவது அரசின் கடமை. ஆனால் அமைச்சரே திமுக வெற்றி பெற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கு நிதி கொடுக்க மாட்டோம். குறைவான நிதியைத்தான் கொடுப்போம் என வெட்ட வெளியில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் இந்த நிலைபாடு ஓட்டுப் போட்ட மக்களுக்கு துரோகம் செய்வதாகத்தான் அர்த்தம். ஆகவே இந்த விவகாரத்தை கட்சி தலைமைக்கு கொண்டு செல்ல உள்ளோம். அமைச்சர் கருப்பணன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்" என தெரிவித்தார்.