கொசுவைக் கொன்றதால் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டவர்!
ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் அடித்துக் கொன்ற கொசுவின் படத்தை வெளியிட்டதால், ட்விட்டரில் இருந்தே நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டரில் வன்முறையான விஷயங்கள் பதிவிடுவதைத் தடுப்பதற்கான பல முன்னெடுப்புகள் எடுக்கப்படும். அந்த வகையில் தன்னைக் கடித்த கொசுவைக் கொன்று, அதை புகைப்படம் எடுத்து பதிவிட்ட பயன்பாட்டாளரை ட்விட்டர் வெளியேற்றிய செய்தி வைரலாகி வருகிறது. ட்விட்டரில் @nemuismywife என்ற பெயருடன் செயல்பட்டு வந்த ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் கொல்லப்பட்ட கொசுவுடன் கூடிய படத்தைப் பதிவிட்டு, அதில் ‘நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது, எங்கிருந்து வந்து என்னைக் கடிக்கிறாய்? செத்துப் போ!’ என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து இவரது கணக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டது. பின்னர் @DaydreamMatcha என்ற புதிய கணக்குடன் ட்விட்டருக்குள் வந்த அவர், ‘ஒரு கொசுவைக் கொன்றதற்காக எனது முந்தைய கணக்கு முடக்கப்பட்டு விட்டது. அது என்ன வன்முறையா?’ என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு 31,000 முறை ரீட்வீட் மற்றும் 27,000 முறை லைக் செய்யப்பட்டிருந்தது.
ட்விட்டர் விதிமுறைகளில் வன்முறையைத் தூண்டும் விஷயங்களை, உடனடியாக நீக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்