போர்ச்சுக்கல் நாட்டிற்கு இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவருக்கு பிரசவவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முக்கிய மருத்துவமனையான சாண்டா மரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் போதிய படுக்கை இல்லாததால், அந்த பெண்ணை சாண்டா மரியா மருத்துவமனையிலிருந்து சாவே பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு மாற்ற முடிவெடுத்தனர்.
இதன் காரணமாகக் கடந்த செவ்வாய்க்கிழமை(1.10.2024) ஆம்புலன்ஸ் உதவியுடன் இந்தியக் கர்ப்பிணிப் பெண் மாற்றப்பட்டபோது செல்லும் வழியிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இருப்பினும் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையைப் பத்திரமாக மீட்டு மருத்துவர்களில் நேரடி கட்டுப்பாட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் முக்கிய மருத்துவமனையில் படுக்கையின்மை மற்றும் மருத்துவர் பற்றாக்குறைக் காரணமாக ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி பெரும் பேசுபொருளாக மாறியது. இது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில் பெண் உயிரிழந்த 5 மணி நேரத்தில் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மார்டா டெமிடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவத்துறையில் நடந்த இந்த குறைபாடு காரணமாகத் தார்மீகப் பொறுப்பேற்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து அந்நாட்டின் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா, இக்கட்டான சூழ்நிலையில் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மார்டா டெமிடோ செய்த அனைத்து பணிகளுக்கும் நன்றி என்று கூறியிருக்கும் அவர், போர்ச்சுக்கல் நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான சீர்த்திருத்தங்கை தொடரவும் உத்தரவிட்டுள்ளார்.
மார்டா டெமிடோ கொரோனா தொற்று காலத்தில் போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை திறம்பட செய்து முடித்ததற்காகப் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.