விபத்தைத் தவிர்ப்பதற்காக விமானி ஒருவர் தான் ஓட்டிவந்த விமானத்தை நெரிசல்மிக்க சாலையில் தரையிறக்கிய காட்சி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ளது ஹஃபிங்டன் கடற்கரை. கடந்த வெள்ளிக்கிழமை காலை, இங்குள்ள சாலையில் வேலைக்கு செல்பவர்களின் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தது. அப்போது மிகுந்த இரைச்சலுடன் சிறிய ரக விமானம் ஒன்று கார்களுக்கு மேல் வேகமாக கடந்து செல்கிறது. இதை கவனித்த வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக தங்கள் வாகனங்களை ஓரங்கட்ட, விரைந்துசென்ற விமானம் எந்த பாதிப்புமின்றி தரையிறங்கியது. இந்த நிகழ்வின்போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தக் காட்சிகள் வாகன ஓட்டி ஒருவரின் டேஷ் போர்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளன. காரை ஓட்டிச் சென்ற நபர் பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கிய பெண்ணை நோக்கி கையை உயர்த்த, அவரும் பதிலுக்கும் கையை உயர்த்துவதும் அதில் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் உதவியுடன் விமானம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. விமானம் மேலே பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அதன் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் இருந்து தப்பவே தான் சாலையில் விமானத்தைத் தரையிறக்கியதாக விமானத்தை இயக்கிய பெண் தெரிவித்துள்ளார்.