இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 12 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே, பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் ரானுவம் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் உள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்லாமிய ஜிஹாத் தான் காரணம். மேலும், பாலஸ்தீனத்தின் ஏவுகணை தான் தவறுதலாக விழுந்திருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து ஜ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இஸ்ரேல் பிரதமர் பொய் கூறுகிறார். அந்த மருத்துவமனையை சுற்றி ஹமாஸ் படையினர் இருப்பதாக நினைத்து தான் இஸ்ரேல் இந்த தாக்குதல் நடத்தியதாக பிரதமர் நெதன்யாகுவின் டிஜிட்டல் செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருந்தார். அதன் பின்னர், அவர் பதிவிட்ட அந்த பதிவை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். அவர் செய்திருந்த பதிவினுடைய நகல் எங்களிடம் உள்ளது.
ஆனால், இப்போது அவர்கள் பாலஸ்தீனத்தின் மீது பழியை சுமத்துகிறார்கள். காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான். அந்த குற்றத்திற்கு அவர்களே பொறுப்பு” என்று கூறினார்.