கரோனா வைரஸ் காரணமாகப் பலியானவர்கள் எண்ணிக்கை 14,680 ஐ கடந்துள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் சீனாவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல அமெரிக்காவும் கரோனாவைக் கட்டுப்படுத்த திணறி வருகிறது. உலகளவில் கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,680 ஐ கடந்த நிலையில், ஸ்பெயினில் 1,772, ஈரானில் 1,685 உயிரிழந்துள்ளனர்.
165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,37,553 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 651 பேர் இறந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 5,560 பேருக்கு கரோனா தொற்றுக் கண்டறியப்பட்டுள்ள சூழலில் அங்குப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,138 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரிட்டனில் இதுவரை 281 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 34,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 450 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 40 முதல் 80 சதவீதம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்படலாம் என நியூயார்க் ஆளுநர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள 34,000 பேரில் 15,000 பேர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.