கரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள நிலையில், இதனால் 2.21 லட்சம் பேருக்கும் மேல் பாதிப்படைந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் இந்தியாவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளதால், இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மலேசியாவிலும் இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மலேசியாவில் தேவையின்றி மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாரம்பரியமிக்க மலாக்கா நகரில், தெருக்கள் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. மலேசியா முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த உத்தரவுகளை மீறினால் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்றும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மக்கள் வெளியில் செல்வதாக இருந்தால் அத்தியாவசிய தேவையாக இருந்தால் மட்டுமே, போலீசாருக்கு தகவல் அளித்து, அவர்கள் அனுமதியுடன்தான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-மகேஷ்.