பாகிஸ்தானில் இன்று (08-02-24) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் - இ - இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகின.
இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும், இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், இங்கு பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலையொட்டி நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பிற்காக போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என பல்வேறு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையை பலத்த பாதுகாப்புக்கும் மத்தியிலும், நேற்று (07-02-24) அங்கு இரண்டு இடத்தில் வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. மேலும், இந்த வெடிகுண்டு சம்பவம் இரண்டு தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து நடந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் பிஷின் நகரில் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள தேர்தல் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு சம்பவம் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில், பலரும் சிக்கி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே பலுசிஸ்தானின் பஞ்சர் நகரில் உள்ள வேறொரு தேர்தல் அலுவலகத்துக்கு அருகே மற்றொரு வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் தேர்தல் அலுவலகமும், அதன் அருகில் உள்ள பல கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்தன. இந்த வெடிகுண்டு வெடிப்பில் சிக்கி பலர் பலியாகியும், பலர் படுகாயமும் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 30 பேர் பலியானதாகவும், 42 பேர் படுகாயமடைந்ததகவும் பலுசிஸ்தான் மாகாண தலைமை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 5ஆம் தேதியில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.