கடவுள் சொன்னால் அமெரிக்க அதிபர் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என அமெரிக்க நடிகை ஓப்ரா வின்ஃப்ரே தெரிவித்துள்ளார்.
உலகின் வலிமைவாய்ந்த பெண்களில் ஒருவர் எனப் புகழப்பட்டவர் நடிகை ஓப்ரா வின்ஃப்ரே. 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் போட்டியிடுவார் என இப்போதே பேச்சுகள் அடிபடுகின்றன. ஓப்ராவிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் பலரும் கூட இதை உறுதி செய்துள்ள நிலையில், திட்டவட்டமாக அவர் மறுத்துவருகிறார்.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஓப்ரா வின்ஃப்ரே, ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை. எனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு செலவு செய்ய பல செல்வந்தர்கள் முன்வரத் தயாராக இருக்கும் நிலையில், இப்போது வரை எனக்கு அப்படியொரு ஆசையேயி இல்லை. என் டி.என்.ஏ. அமெரிக்க அதிபருக்கானது அல்ல’ என தெரிவித்தார்.
மீண்டும் மீண்டும் தேர்தல் குறித்தே அழுத்தமாக கேட்டபோது, ‘தேர்தலில் போட்டியிடுவது பற்றி எனக்குத் தெரியாதா? அப்படி ஒன்று தேவையென்றால் கடவுள் என்னிடம் சொல்லியிருப்பார் அல்லவா? அப்படி சொன்னால் போட்டியிடுவேன்’ என பதில் சொல்லி பேட்டியெடுத்தவரின் வாயை அடைத்திருக்கிறார்.
கடவுள் சொன்னால் அரசியலில் குதிப்பேன் என இங்கும் ஒருவர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஒருவேளை இதுவும் ஆன்மீக அரசியலாக இருக்குமோ?