பாகிஸ்தான் பங்குச்சந்தை கட்டிடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள், காவலர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை கட்டிட வளாகத்தில், இன்று மதியம் திடிரென நுழைந்த ஆயுதமேந்திய நான்கு பயங்கரவாதிகள் அப்பகுதியில் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அப்போது அங்கு காவலிலிருந்த பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கி ஏந்திய அந்த பயங்கரவாதிகள் ஒரு வாகனத்திலிருந்து கட்டிடத்தின் முன்பகுதியில் வந்து இறங்கியதாகவும், பின்னர் பங்குச் சந்தை கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு கையில் வைத்திருந்த கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் நான்கு பாதுகாப்பு காவலர்கள், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நான்கு பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.