நாம் வாழும் இந்த உலகில் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள, தகவல்களைப் பரிமாற மொழி அத்தியாவசியமானதாக இருக்கிறது. இன்றளவில் 7,097 மொழிகள் பேசப்படுவதாக ஒரு தகவல் சொல்கிறது. ஆனால், அவற்றில் பல மொழிகள் அழிவிற்கான விளிம்பில் காத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் மூன்றே மூன்று பேரால் மட்டுமே பேசப்பட்டு வரும் மொழி மற்றும் அதைப் பேசி வருபவர்களின் எண்ணங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.
வடக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் மூன்று தலைமுறைக்கு முன்னர்வரை முக்கியமான மொழியாக இருந்தது பதேசி. எழுத்து வடிவமற்ற இந்த மொழி பரவலாக பேசப்பட்டு வந்ததும் கூட. ஆனால், காலம் செல்லச் செல்ல அந்த நிலை மாறியது. தோர்வாலி மற்றும் பாஸ்தோ ஆகிய இரண்டு மொழிகளின் ஆதிக்கம் அதிகமான சூழலில், படிப்படியாக பதேசி மொழி அழிவைச் சந்தித்திருக்கிறது.
குல், ரஹீம் குல் மற்றும் அலி ஷேர் ஆகிய மூவருக்கு மட்டுமே தற்போது பதேசி மொழி தெரியுமாம். இவர்கள் மூவரும் தங்களோடு பதேசியும் மரணமடைந்து விடும் என அஞ்சியும், தங்கள் பிள்ளைகளுக்கு இந்த மொழியைக் கற்றுக்கொடுக்க முடியவில்லை என எண்ணியும் வருத்தம் கொள்கின்றனர். மேலும், அதிகப்படியானோர் பேசாத மொழி என்பதால், இவர்களுக்குமே பல வார்த்தைகள் நினைவில் இல்லையாம்.
தற்போது அந்த மொழியைக் காப்பது மற்றும் காலகாலத்திற்கும் பயணிக்க வைப்பதற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன.