உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில், பெண்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் பெண்களுக்கு இயல்பாக வழங்கப்படும் சலுகைகள் பலுவும், அங்குள்ள பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.
ஆனால், அந்நாட்டு அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் மூலம், பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவது அனைவரிடத்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில், எந்தத் தொழில் தொடங்கினாலும் ஆண்களின் அனுமதி வேண்டும் என்ற கட்டாயத்தில் இனி கிடையாது என்ற தகவல் பலரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை அந்நாட்டின் நிதி மற்றும் முதலீட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பெண்கள் அவர்களது சொந்தத் தொழில்களைத் தொடங்கவும், இ-சேவை மூலம் ஆதாயங்களைப் பெறவும் காப்பாளர்களிடம் இருந்து எந்தவிதமான அனுமதியையும் பெறத் தேவையில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர், ஒரு பெண் அங்கு சொந்தமாக தொழில் தொடங்கவோ, வேறு சில சேவைகளைப் பெறவோ, அவரது தந்தை, கணவர் அல்லது சகோதரரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ‘விஷன் 2030’-இன் இலக்கான வேலைச்சூழலில் பெண்களை 22 சதவீதத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்காக உயர்த்துவதன் முதல் படி இதுவென்று சொல்லப்படுகிறது.