ஹூஸ்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில், "மக்களை இஸ்லாமியத் தீவிரவாதத்திடம் இருந்து காக்கவும், எல்லையைக் காக்கவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன" என்று பேசினார். தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்தோடு இணைத்துப் பேசியதற்காக டிரம்ப்பிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்தநிலையில் தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்தோடு இணைத்துப் பேசியதற்கு பாகிஸ்தானின் இம்ரான் கான் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியை சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த எம்.பி. ரமேஷ் குமார் வங்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மதத்தோடு தீவிரவாதத்தை இணைத்துப் பேசியது ஒற்றுமையின் மீதும், மனிதநேயத்தின் மீதும், அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருக்கும் மனிதநேயம் கொண்டவர்களை வேதனைப்படுத்துகிறது. என அவர் தெரிவித்துள்ளார்.