அதிக நேரம் வேலைபார்த்ததால் சோர்வடைந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு, அந்த நிறுவனம் ரூ.15 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டில் இயங்கி வரும் நிறுவனம் கிரீன் டிஸ்ப்ளே கம்பெனி. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த கோடா வதனாபே (24) எனும் ஊழியர், கடந்த 2014ஆம் ஆண்டு, ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். அவர் உயிர் பிரியும்போது ‘கரோஷி’ எனக் கூறிவிட்டு இறந்திருக்கிறார். ஜப்பான் மொழியில் கரோஷி என்றால் கூடுதல் வேலை எனப் பொருள்படும்.
இந்நிலையில், வதனாபேவின் தாயார் ஜப்பான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த பிப். 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘ஜப்பானில் அதிக வேலை நேரத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக நிகழும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த விஷயங்களில் நிறுவனங்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊழியர்களுக்கு தகுந்த இடைவெளியுடன் கூடிய வேலைநேரத்தை அமல்ப்படுத்தவேண்டும். விபத்தில் உயிரிழந்த வனதாபேவின் குடும்பத்துக்கு 76 மில்லியன் யென் இழப்பீடாக வழங்கவேண்டும்’ என தீர்ப்பளித்தார். இதையடுத்து, கிரீன் டிஸ்ப்ளே நிறுவனம் வனதாபேவின் குடும்பத்திற்கு நீதிபதி குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையினை வழங்கியுள்ளது.