ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் புகுந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஈத் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சிறப்புத் திருவிழா ஒன்றில் பங்கேற்பதற்காகப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் குழுமியிருந்த மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கையில், “பாகிஸ்தான் ராணுவத்துக்கும் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே சாமன்-ஸ்பின் போல்டக் பகுதியில் வியாழக்கிழமை இரவு கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அப்பகுதியில் திருவிழாவுக்காக மக்கள் கூடியிருந்தபோது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலியாகினர். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களை நடத்தினால் ஆப்கான் ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாகப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.