துருக்கியில் மொத்தம் 3000க்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் 1800 பேர் இஸ்தான்புல் நகரிலும் 250 பேர் தலைநகரான அங்காராவிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் துருக்கியில் இந்தியர் ஒருவரைக் காணவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தொலைதூரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நிர்வாகி சஞ்சய் வர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “துருக்கியில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் இந்தியாவை சேர்ந்த நபரைக் காணவில்லை. கடந்த இரு நாட்களாக அவரைக் கண்டறிய முடியவில்லை. அவரது குடும்பத்தார் பெங்களூருவில் வசிக்கின்றனர். அவர்களுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தொலைவில் உள்ள 10 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறுகையில், “தற்காலிக மருத்துவமனையை அமைப்பதற்கான நான்காவது இந்திய விமானப்படை விமானம் துருக்கிக்கு சென்றுள்ளது. இதில் இந்திய ராணுவ மருத்துவக் குழுவைச் சேர்ந்த 54 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் மருந்துகளும் முகாம் அமைப்பதற்கான பிற பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இந்நிலையில் மத்திய அரசு துருக்கிக்கு அனுப்பிய ஆபரேஷன் தோஸ்த் சிறப்பு மீட்புக் குழு நிவாரணப் பணி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.