இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், அர்ஜெண்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி, ஹமாஸ் படையினரிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த 90 வயது மூதாட்டியின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பித்த மூதாட்டி எஸ்டர் குனியோ கூறுகையில், “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரு நாள் காலை என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து எனது குடும்பம் எங்கே? என்று கேட்டனர். அதற்கு நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன் என்று எனது மொழியில் கூறினேன். எனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் என் மீது கோபமாகி எந்த மொழியில் பேசுகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் அர்ஜெண்டினாவில், ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன் என்று கூறினேன். அதற்கு அர்ஜெண்டினா என்றால் என்ன..? என ஒருவர் கேட்டார்.
நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்தேன். அதை கூறியதும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு என்னுடன் செல்பி எடுத்துவிட்டு சென்றனர். நான் மெஸ்ஸியின் பெயரை குறிப்பிட்டதால் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று கூறினார். ஹமாஸ் படையினரால் கடத்தப்பட இருந்த மூதாட்டி, பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் காப்பாற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.