Skip to main content

“சர்வதேச நீதிமன்றத்தால் கூட தடுக்க முடியாது” - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
"Not even the International Court of Justice can stop it" - Israeli Prime Minister's plan

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போருக்கு சர்வதேச அளவில் அழுத்தமும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. ஆனால் எதையும் இஸ்ரேல் கண்டுகொள்ளாமல் தான் சொன்னபடி ஹமாஸ் அமைப்பில் இருக்கும் கடைசி நபரை அழிக்கும் வரை யுத்தம் முடிவுக்கு வராது என்று தொடர்ந்து காசா மீது குண்டு மழையைப் பொழிந்து வருகின்றது. இதில் காசாவில் நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ஹமாஸ் அமைப்பை அழிப்பதிலிருந்து எங்களைத் தடுக்க சர்வதேச நீதிமன்றத்தால் கூட முடியாது” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்