வடகொரியாவில் பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்கள், மூன்று மாதங்கள் கடுமையான உழைப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், பொது இடங்களில் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், மக்கள் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என அனைத்து நாடுகளின் அரசுகளும் தங்களது மக்களை அறிவுறுத்தி வருகின்றன. இதில் பல நாடுகளில், மக்களை மாஸ்க் அணியவைக்கும் விதமாக, மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடகொரியாவில் பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்கள், தொழிலாளர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடுமையான உழைப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
அந்நாட்டின் அதிபருக்கு எதிராகச் செயல்படுபவர்களை அடைத்துவைத்து தண்டனைகள் வழங்கப் பயன்படுத்தப்படும் இந்தத் தொழிலாளர்கள் முகாம்களில் இனி மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களும் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பொதுவெளிக்கு வரும்போது, மாஸ்க் அணிந்திருக்கிறார்களா என்று சோதிக்க மாணவர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 16 ஆம் தேதி தொடங்கி, பியோங்யாங்கிலும், மற்ற மாகாண நகரங்களிலும் காவல்துறை அதிகாரிகளுடனும், கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இணைத்து மாஸ்க் அணியாத மக்களைக் கண்டறிய ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றனர்.