வடகொரியா நாட்டில், குடிமக்கள் 10 நாட்கள் சிரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 10 நாட்கள் துக்க அனுசரிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துக்க அனுசரிப்பு காலத்தில், சிரிப்பது மட்டுமின்றி மதுபானம் அருந்துதல், மளிகைப் பொருட்களை வாங்குதல், ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கும் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பிறந்தநாளைக் கொண்டாடவும், இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை வடகொரியாவின் எல்லையோர நகரமான சினுய்ஜுவில் வசிப்பவர் ரேடியோ ஃப்ரீ ஏசியாவிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தடை உத்தரவுகளை மீறுபவர்கள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திப்பார்கள் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் துக்க அனுசரிப்பு காலத்தில் தடையை மீறி மது அருந்தி பிடிபட்டவர்கள், கைது செய்யப்பட்டு கருத்தியல் ரீதியிலான குற்றவாளிகளாக நடத்தப்பட்டார்கள் என்றும், அவர்களை மீண்டும் பார்க்க முடியவில்லை என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.