சிங்கப்பூரில் கடந்த ஆண்டு வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் இடையே நடைபெற்ற சந்திப்பு போல இனி மீண்டும் நடக்க வாய்ப்பில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே கடந்த சில ஆண்டுகளாக பதட்டமான சூழல் நிலவிவந்த நிலையில், இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்தனர். மேலும், அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அடுத்தடுத்து ஆயுத சோதனைகளையும் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ட்ரம்ப்-கிம் இடையே சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. இதன் மூலம் இருநாட்டு உறவுகளில் குறிப்பிடத்தகுந்த வகையில் எந்தவித மாற்றமும் ஏற்படாத சூழலில், இனி இதுபோன்ற சந்திப்புகள் மீண்டும் நடக்க வாய்ப்பில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சோன் குவோன், "சிங்கப்பூரில் நடைபெற்ற ட்ரம்ப்-கிம் சந்திப்பு போல் இனி நடைபெற வாய்ப்பில்லை. இந்த சந்திப்பு மூலம் இருதரப்பு உறவில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனவே, எந்த ஒரு பலனும் இன்றி ட்ரம்ப் கொடுக்கும் வெற்று வாக்குறுதியை நம்பிப் பயனில்லை. எனவே, அத்தகைய வெற்று வாக்குறுதிகளை அளிக்கும் வாய்ப்பை இனி ட்ரம்ப்புக்கு வழங்கப்போவதில்லை. ஏதோ மிகப்பெரிய அரசியல் சாதனை நிகழ்த்துகிறோம் என்ற பெயரில் அவர் மேற்கொள்ளும் இத்தகைய சந்திப்புகளை இனி நம்பப் போவதில்லை. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக எங்கள் நாட்டு ராணுவத்தைப் பலப்படுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.