பணத்திற்காக பெண்களை கடத்தி விற்கும் தொழில் ஆப்பிரிக்க கண்டத்தில் பெருமளவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நைஜிரியாவிலிருந்து இதுவரை 20,000 இளம் வயது பெண்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நைஜிரியாவில் நிலவும் வறுமையான சூழலை பயன்படுத்திக்கொள்ளும் சிலர், மலேசியாவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை, மாதம் 70,000 ரூபாய் சம்பளம் என அந்த பெண்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி மாலி, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பாலியல் தொழிலாளிகளாக விற்று வந்துள்ளனர். இது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சூழ்நிலையில் மாலி நாட்டில் உள்ள மூன்று விடுதிகளில் இருந்து மட்டும் 104 பெண்கள் மீட்கப்பட்டுள்ளார். அதில் பெரும்பாலான பெண்கள் 13 முதல் 24 வயதுக்குள் உள்ளவர்கள். மேலும் இது குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில், கடத்தப்படும் பெண்களில் 77 சதவீத பெண்கள் கடத்தப்பட்டவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்த தனி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.