நியூயார்க் காவல்துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பிரதிமா புல்லர் மால்டோனாடோ என்பவர் தனது ஒன்பது வயது வரையில் இந்தியாவில் வளர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு தான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார். டாக்சி டிரைவராக இருந்த இவரது தந்தை கடந்த 2006 ஆம் ஆண்டு காலமான நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக நியூயார்க் காவல்துறையில் காவலராக இணைந்த பிரதிமா அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் உள்ள சவுத் ரிச்மண்ட் ஹில்லில் என்ற இடத்தில் 102வது போலீஸ் வளாகத்தை நடத்தி வருகிறார்.
மேலும் தனது கடின உழைப்பால் காவல் துறையில் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்ற பிரதிமாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் காவல்துறையில் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெற்ற இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையுடன், நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெறும் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் பிரதிமா பெற்றுள்ளார். பிரதிமாவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பிரதிமாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.