உலக அளவில் அதிகமாக லைக் செய்யப்பட்ட ஒபாமாவின் ட்வீட்!
உலக அளவில் அதிகமாக லைக் செய்யப்பட்ட ட்வீட் எனப்படும் ட்விட்டர் பதிவுகளில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ட்வீட் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னதாக சாரலேட்வில்லே எனப்படும் பகுதியில் வெள்ளைநிறத்தவர்களின் மேலாதிக்கத்திற்கான பேரணியில் கலந்துகொண்டவர்களின் கூட்டத்தின் மீது, கார் ஒன்று திடீரென்று நுழைந்தது. இதில் ஒரு பெண், இரு காவலர்கள் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து, பராக் ஒபாமா ‘சுதந்திரத்திற்கான நீண்ட பயணம்’ என்ற புத்தகத்தில் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக குரல் எழுப்பிய நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகளில் சிலவற்றை ட்விட்டரில் பதிவிட்டார்.
அதில் அவர், ‘யாரொருவரும் யாரொருவரையும் அவர்களின் நிறம் மற்றும் அவர்களின் பின்னணியிலான மதத்தைக் காரணமாகக் கொண்டு வெறுப்பதற்காகப் பிறக்கவில்லை’ என பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த பதிவோடு ஒபாமா ஒரு திறந்த ஜன்னலில் நிற்கும் பல நிறங்களைக் கொண்ட குழந்தைகளைப் பார்ப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
அவரது இந்தப்பதிவு 30 லட்சம் பேர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பதிவு 12 லட்சம் பேர்களால் ரீட்வீட் எனப்படும் பகிர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவும் உலக அளவில் அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் அரியானா கிராண்டி எனும் பாப் பாடகி, இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அவரது இசைக் கச்சேரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான 22 பேர்களுக்காக, இரங்கல் தெரிவித்த பதிவு 24 லட்சம் பேர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்