பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பெரும்பான்மை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த எம்.கியூ.எம் கட்சி எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் மொத்தமுள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்களுக்கான ஆதரவு தேவைப்படுகிற நிலையில் இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வியாழக்கிழமையன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இம்ரான்கான் அரசுக்கு பெரும்பான்மை இருக்காது, இதனால் அரசு கலைக்கப்பட்டுவிடும் என பேசப்பட்டு வந்த நிலையில், இம்ரான்கான் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்த எம்.கியூ.எம் கட்சி தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் இம்ரான்கான் பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் ராணுவத்திற்கும் இடையேயான உறவு சரியாக இல்லை எனவும், பாகிஸ்தான் ராணுவத்தினுடைய முக்கிய தலைவர்கள் 'உங்கள் கட்சி பெரும்பான்மை இழந்துவிட்டது எனவே நீங்கள் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை' என அறிவுறுத்தி இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சென்ற வாரம் நடைபெறுவதாக இருந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.