ரஃபேல் போர்விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இருப்பினும், சமீபத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இடைத்தரகருக்கு ரூ. 9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக ஃபிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வௌியிட்டது. இதனையடுத்து, ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதுகுறித்து பிரதமர் நாட்டிற்குப் பதிலளிப்பாரா எனவும் காங்கிரஸ் கேள்வியெழுப்பியது.
இதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாஜக மறுத்தது. இந்தநிலையில், ரஃபேல் விமானங்களை இந்தியாவிற்கு உற்பத்தி செய்யும் டாசல்ட் ஏவியேஷன் நிறுவனம், இந்தக் குற்றசாட்டுகளை மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், "ஃபிரெஞ்சு ஊழல் ஒழிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரப்பூர்வ அமைப்புகளால், பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த விதிமீறலும் பதிவாகவில்லை. குறிப்பாக இந்தியாவுடனான ரஃபேல் ஒப்பந்த உருவாக்கத்தில் எந்த விதிமீறலும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ரஃபேல் ஒப்பந்தம் இரு அரசுகளுக்கிடையேயானது. ரஃபேல் தொடர்பான ஒப்பந்தங்கள், ஆணையங்களால் உருவாக்கப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்கிறது. மேலும் இந்த ஒப்பந்தம், அரசாங்கத்திற்கும், தொழில் பங்குதாரர்களுக்கும் இடையே முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.