நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்த தனது மகளை தாய் ஒருவர் விர்சுவல் ரியாலிட்டி தொழிலுட்பம் மூலம் பார்த்த வீடியோ இணைய உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்ப உதவியுடன் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொடங்கியுள்ளது. இதன் மூலம், நிகழ்ச்சியில் பங்கேற்பவர், இறந்துபோன தங்களது குடும்பத்தினரையோ அல்லது நண்பரையோ நேரில் சந்தித்து பேசுவது போன்று தோன்றும் விர்சுவல் ரியாலிட்டி உலகம் அவர்களுக்கு ஏற்படுத்தி தரப்படுகிறது.
‘மீட்டிங் யூ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாங் ஜி சங் என்ற பெண் 2016-ல் மர்ம நோயால் இறந்துபோன தன் 7 வயது மகள் நயோன் என்பவரை வி.ஆர் முறை மூலம் சந்தித்தார். பிரத்தியேக ஹெட்செட், கையுறை ஆகியவற்றை அணிந்து, விர்சுவல் ரியாலிட்டி உலகத்திற்குள் நுழைந்த ஜாங் ஜி சங், கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட தனது மகளை சந்தித்து அவருடன் உரையாடினார். நான்கு ஆண்டுகளுக்கு இறந்த தனது மகளின் முப்பரிமாண உருவத்தை கண்ட அவர், கண்ணீர்விட்டு அழுதார்.
பின்னர் தனது மகளுடன் நீண்ட நேரம் உரையாற்றிய அவர், இறுதியில் தனது மகள் தூங்கியவுடன் அதிலிருந்து வெளியே வருகிறார். தாய், மகளுக்கு இடையிலான இந்த உருக்கமான சந்திப்பை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோவாக பதிவு செய்து ஆவணப்படமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலான மக்கள் இந்த வி.ஆர் முறையை பாராட்டினாலும், இதன் மூலம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை சுட்டிக்காட்டி பலரும் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.