ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவில் உள்ள ஷான்டோங் மாகாணத்தின் கிங்தாவோ நகரில் நடைபெறுகிறது. இது இன்று மாலை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி சீனா தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். பிரதமருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்துகொண்டது.
இந்த மாநாட்டில் அமைப்பில் இருக்கும் எட்டு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, எட்டு நாடுகளின் பிராந்தியங்களில் அமைதியை மேம்படுத்துவது போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
சீன அதிபரான ஜின்பிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து தலைவர்களுக்கும் இன்று மாலை விருந்தளிக்க உள்ளார் . இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பிற நாட்டு தலைவர்களுடனும் மோடி சந்தித்து பேச இருக்கிறார்.