வெள்ளை மாளிகையில் பணியாற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தித் தொடர்பாளருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 78,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பின் உதவியாளர் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது நேற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் பென்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளர் கேட்டி மில்லருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கேட்டியும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.