இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 51 பள்ளி குழந்தைகளை பேருந்தின் உள்ளே அடைத்து பேருந்து ஓட்டுநர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிலன் நகரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து பள்ளியிலிருந்து உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், ஓட்டுநர் பேருந்தை வேறு வழியில் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்தில் ஏறிய மற்றொரு மர்ம நபர் மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அந்த மாணவர்கள் பயந்து செய்வதறியாது திகைத்துள்ளனர்.
அப்போது ஒரு மாணவன் தனது பெற்றோருக்கு அங்கு நடப்பதை குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளான். அதன் பிறகு இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த பேருந்தை துரத்தி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது காவலர்களின் வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு பேருந்து நிற்காமல் சென்றுள்ளது.
அதன்பின் போலீசார் அந்த வாகனத்தை சுற்றிவளைத்த போது அந்த ஓட்டுநர் அதிலிருந்து கீழே இறங்கி அந்த பேருந்து கதவுகளை பூட்டி மாணவர்களுடன் அந்த பேருந்துக்கு தீ வைத்துள்ளான். அப்போது அவனை பிடித்த காவல் துறையினர் கைது செய்தனர்.
பேருந்து ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர். பேருந்தை கொளுத்தும் போது அந்த ஓட்டுநர், "யாரும் இதில் பிழைக்க வாய்ப்பில்லை. நான் ஒரு படுகொலையை நிகழ்த்த போகிறேன். மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழும் மரணங்களை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்" என கூறியுள்ளான். இத்தாலி நாட்டிற்கு அகதிகளாக வரும் மக்கள் அங்கு குடியேறுவதற்கு அந்நாட்டின் புதிய அரசு முட்டுக்கட்டை போட்டதால், அதனை எதிர்த்து இவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.