மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் புலானி இனத்தவர்கள் வசிக்கும் கிராமத்தில் புகுந்த வேட்டைக்காரர்கள் அந்த கிராமத்தில் இருந்த அப்பாவி மக்கள் 130 பேரை கொடூரமான முறையில் கொன்று குவித்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்த சோகமே அப்பகுதியை விட்டு இன்னும் அகலாமல் உள்ள நிலையில் தற்போது மீண்டும் புலானி மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் புகுந்து டோகோன் இனத்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே இழுத்து கொடூரமாக தாக்கி, கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் 24 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்கு பின்னர் அங்கிருந்த கால்நடைகளையும் அவர்கள் அபகரித்து சென்றுள்ளனர். இந்த தொடர் தாக்குதல் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.