லண்டனில் கன்டெய்னர், மினி பஸ் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பலி!
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன். அங்கு பக்கிங்ஹாம்ஷயர் என்ற இடத்தில் எம்-1 நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3.15 மணிக்கு 2 கன்டெய்னர் லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்தன.
அப்போது அந்த நெடுஞ்சாலையில் நாட்டிங்ஹாமில் இருந்து வெம்பிளேவுக்கு ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது. அந்த மினி பஸ் மீது 2 கன்டெய்னர் லாரிகளும் பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் மினி பஸ்சை ஓட்டிய டிரைவர் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய 2 கன்டெய்னர் லாரிகளின் டிரைவர்கள் ரிஸ்சார்டு மேசிராக் (வயது 31), டேவிட் வேக்ஸ்டாப் (53) ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரிஸ்சார்டு மேசிராக் அளவு கடந்த மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய மினி பஸ்சில் சென்றவர்கள் தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களில் 8 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் தமிழ்நாட்டையும், ஒருவர் கேரளாவையும் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரில் 3 பேர் காஞ்சீபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் மண்டப தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (63), இவரது தங்கை தமிழ்மணி (50), தங்கை கணவர் அறச்செல்வம் (60) ஆகியோர் ஆவார்கள்.
இவர்கள் அனைவரும் காஞ்சீபுரத்தில் உள்ள பிரபல கண் மருத்துவர் டாக்டர் ஏ. சிவக்குமாரின் உறவினர்கள். விபத்தில் மரணம் அடைந்த பன்னீர்செல்வம், தமிழ்மணி, அறச்செல்வம் ஆகிய 3 பேரின் உடல்களை சொந்த ஊரான பிள்ளையார்பாளையம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் டாக்டர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4 பேர் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவித்துள்ளனர்.