
சென்னை கலைவாணர் அரங்கத்தில், “திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு” நூல் வெளியிட்டு விழா நேற்று ((22.4.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நூலினை வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி. செல்வம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரைக்கும், அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்கக் கூடியவர். நான் அவருக்குக் கூற விரும்புவது, இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் அவருக்குச் சொல்கிறேன் என்றால், அது அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள், வெறும் வாயையே மெல்லக் கூடிய விநோத ஆற்றல் பெற்றவர்கள். அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதைக் கட்சியின் தலைவராக மட்டுமல்ல. உங்கள் மீது இருக்கின்ற அக்கறை கொண்டவனாகவும், அறிவுரை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
என் சொல்லைத் தட்டாத பி.டி.ஆர் என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்” எனப் பேசினார். முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசுகையில், “நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போன்று எல்லா பூங்காக்களும் டிஜிட்டல் சேவைத் துறையின் கீழ் செயல்படுவதில்லை. டைடல் பார்க், நியோ டைடல் பார்க் உள்ளிட்ட தொழில் நுட்ப பூங்காக்கள் தொழில் துறையிடம் தான் இருக்கிறது. எங்களிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை. நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.