Skip to main content

தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Published on 23/04/2025 | Edited on 23/04/2025

 

PM Modi holds urgent meeting with National Security Advisor

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பைசரன் புல்வெளிகளில் நேற்று ((22.04.2025) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது ராணுவ சீருடை அணிந்து வந்த பயங்கரவாத கும்பல், சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதையடுத்து, பஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 'காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிவிட முடியாது' என  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான், தனது 2 நாள் சவுதி அரேபியா பயணத்தை முன்னதாக முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (23.04.2025) டெல்லி வந்தடைந்தார்.

இந்நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விவரங்களை பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறைச் செயலாளர் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதே சமயம் பஹல்காம் பகுதியில் தொடர்ந்து  தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளை பிடிக்க ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதோடு ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் இன்று  சம்பவம் நடந்த இடத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்