342 கிலோ எடை கொண்ட,சிங்க எலும்புகளை விமானநிலைய அதிகாரிகள் மற்றும் சுற்றுசூழல் அமைச்சக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் சுற்றுசூழல் அமைச்சக அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மலேஷியா அனுப்பப்பட இருந்த 342 சிங்க எலும்பு கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலேசியாவிற்கான பொருட்கள் கொண்டுசெல்லும் கிரேட்ஸ் எனப்படும் மரப்பலகைப் பெட்டிகளிலிருந்த சரக்குகள் பற்றி தவறாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல்களை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது, அலுமினியத் தாளில் மூடப்பட்டிருந்த 34 பெட்டிகளில் சிங்க எலும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த எடை 342 கிலோ ஆகும்.
பெரும்பாலும் ஆசியாவில் மருத்துவ உபயோகத்திற்கும் மற்றும் ஆபரணத் தயாரிப்புகளுக்கும் இந்த சிங்க எலும்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள சிங்கங்களின் எலும்புகளை ஏற்றுமதி செய்வது சட்டபூர்வமானது என்றாலும், அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்ப முறைப்படி சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் தற்போது பிடிக்கப்பட்டுள்ள இந்த எலும்புகள் முறையாக அனுமதி வாங்கப்படாமல் ஏற்றுமதி செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.