கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 74 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்கள் என லிபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மனித உரிமை மீறல்களால் சித்திரவதைகளை அனுபவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் அந்நாட்டிலிருந்து தப்பித்து ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்காக ஆபத்தான பல பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரையும் இழக்கின்றனர். அவ்வகையில், லிபியாவில் இருந்து தப்பித்து ஐரோப்பா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 120 பேருடன் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. லிபிய நாட்டின் கும்ஸ் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்திற்குக் காரணம், சிறிய படகில் அளவுக்கு அதிகமான மக்களை ஏற்றிச்சென்றதாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுவரை 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் மத்திய மத்தியதரைக்கடலில் ஏற்பட்ட எட்டாவது கப்பல் விபத்து இதுவாகும். மேலும், கடந்த அக்டோபர் தொடக்கத்திலிருந்து இதுவரை 780 லிபிய அகதிகள் இத்தாலி நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், 1,900 பேர் வழியில் மறிக்கப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்வு தொடர்பான ஐ.நா. அமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டு குறைந்தது 900 பேர் மத்தியதரைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், 11,000க்கும் அதிகமானோர் லிபியாக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.