Skip to main content

இணையப்போருக்கு ஆயத்தமாகிறதா ஜப்பான்? வட கொரியா எச்சரிக்கை!

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
இணையப்போருக்கு ஆயத்தமாகிறதா ஜப்பான்? வட கொரியா எச்சரிக்கை!

சைபர் வார் என சொல்லப்படும் இணையப்போருக்கு ஆயத்தமாகி வருவதாக ஜப்பானை வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. 



ஜப்பான் நாட்டின் இராணுவப் பிரிவுகளில் ஒன்று இணையப்பாதுகாப்புப் பிரிவு. தற்போது இதன் குழுக்கள் 110-ல் இருந்து 1,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சில புதிய குழுக்கள் இணைய போருக்கான தொழில்நுட்பங்களில் மேம்பாடுகளை உயர்த்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வட கொரியாவின் ரொடாங் சின்முன் பத்திரிகையில், ‘ஜப்பானின் இராணுவப்பிரிவுகளில் ஒன்றான இணையப் பாதுகாப்புப் பிரிவு சுயபாதுகாப்பு என்ற பெயரில், அதன் குழுக்களை அதிகரித்து வருகிறது. இந்தக் குழுக்கள் அந்த நாட்டின் இராணுவ ரகசியங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இணையத் தாக்குதல்களைத் தடுக்கும் சிறப்பம்சங்களைக் கொண்ட செயலகமும் அங்கு உருவாக்கப்படவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் இந்த நடவடிக்கைகள் ஜப்பானின் இணைய பாதுகாப்பிற்காக அமைக்கப்படவில்லை; அந்நாட்டின் எதிரிகளின் மீது இணையப்போரினைத் துவக்கவே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் தாக்குதல்களைத் தொடங்குவார்கள் எனவும் அந்த பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.

அவர்கள் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற பெயரில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தால், வரலாற்றில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட சுவடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் எனவும் அந்தப் பத்திரிகை செய்தி எச்சரித்துள்ளது. 

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்