காந்தியின் புகைப்படம் பதிக்கப்பட்ட பீர் பாட்டில்களை விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது இஸ்ரேல் நாட்டு பீர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று.
இஸ்ரேல் நாட்டின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்தில் அந்நாட்டில் உள்ள எகியம் பகுதியில் இயங்கி வரும் மால்கா ப்ரீவரீஸ் என்ற நிறுவனம், அதன் மது பாட்டில்களில் 5 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபர்களை இடம்பெறச்செய்தது. இதில் காந்தியின் புகைப்படமும் ஒன்று.
இது இந்தியர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் துணைக்கூடியரசு தலைவர் வரை சென்ற நிலையில், இதனை தயாரித்த நிறுவனம் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "மகாத்மா காந்தியை கவுரவிக்கும் விதமாகவே நாங்கள் அவரது புகைப்படத்தை எங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்தினோம். மேலும் எங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்திய 5 தலைவர்களில் காந்தி மட்டுமே இஸ்ரேலை சாராதவர். நாங்கள் காந்தியை மிகவும் மதிக்கிறோம். இருப்பினும் இந்திய மக்களை வருத்தப்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது. மேலும் விற்பனைக்கு அனுப்பப்பட்ட பாட்டில்களை திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.