இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைப்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஃபிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்தநிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை நிபுணா் குழு, பெகாசஸ் விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை நிபுணா் குழு அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கண்காணிப்பு தொழில்நுட்பத்தையும், வர்த்தகத் துறையையும் மனித உரிமைகளற்ற பகுதிகளாக செயல்பட அனுமதிப்பது ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது. இத்தகைய நடைமுறைகள் கருத்துச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமைகளை மீறுகின்றன. நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பத்திரிகை சுதந்திரத்தை காயப்படுத்துவதோடு ஜனநாயகத்தையும் வலுவிழக்கச் செய்கின்றன. மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளாதவரை, உளவு மென்பொருட்களின் விற்பனையை நாடுகள் நிறுத்தி வைக்கவேண்டும். என்.எஸ்.ஓ குரூப், தங்களது பெகாஸஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துவதால், மனித உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்ததா என்பது தெரியவில்லை. அந்த நிறுவனம் தனது விசாரணையில் கண்டறிந்த தகவல்களை வெளியிட வேண்டும். மனித உரிமை மீறல்களுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் எனக் கருதப்படும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, என்.எஸ்.ஓ போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை விற்கவோ, பரிமாறிக்கொள்ளவோ அல்லது ஒப்பந்தம் செய்துகொள்ளவோ இல்லை என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதிப்படுத்தவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.