
வேலூர் மாநகராட்சியின் 2025-2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் மேயர் சுஜாதாவால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் ஆவணங்களை முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படம் அடங்கிய மஞ்சள் நிற பெட்டியில் கொண்டு வந்து தாக்கல் செய்து பேசினார்.
மாநகரத்தில் உள்ள 60 வார்டுகளிலும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்தல், மாநகராட்சி பள்ளிகளில் 10, 12 பொதுத்தேர்வில் முதல் 3 இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும், அனைத்து மண்டலங்களிலும் சமுதாய கூடம், நூலகம் அமைக்கப்படும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஜெனரேட்டர் வசதி, அனைத்து இடங்களிலும் கேமிராக்கள், நாப்கின் எரிக்கும் இயந்திரம், நம்ம வேலூர் செல்பி பாயிண்ட், மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அம்மா உணவகம் புதுப்பிப்பு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2025 - 2026 ம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு வருவாய் 869.08 கோடியாகவும், செலவினம் 867.49 கோடியாகவும். உபரி நிதியாக 1.58 கோடியாக இருக்கும் என அறிவித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டம் நடந்தபோது, ஆளும்கட்சியை சேர்ந்த திமுக துணை மேயர் சுனில்குமார், கடந்த 4 ஆண்டில் பல கோடிகளை அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் இதுவரை பணிகள் முறையாக நடைபெறவில்லை. பாதாள சாக்கடை பணிகள், சாலை அமைக்கும் பணிகள் முறையாக நடைபெறாமலும், தாமதமாகவும் நடைபெற்று வருகிறது. ஆணையர் மெத்தனபோக்காக இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1-வது மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளது அந்த வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நிதியை ஒதுக்க மாட்டோம் என்று ஆணையராகிய நீங்கள் குறிப்பிடுங்கள் 1-வது மண்டலத்தில் உள்ள 15 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் விட்டுவிடுவோம் என துணை மேயர் சுனில்குமார் 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா ஆகியோர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக சரமாரி கேள்விகளை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.