மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனேசியா, கரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தா உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் அளவிற்கு நிலை மோசமாக இருக்கிறது.
இதுவரை 57,138 கரோனாவால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் கூறினாலும், பரிசோதனை வீதம் குறைவாக இருப்பதால், கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையே அந்நாட்டின் கரோனா பணிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் சிட்டி நதியா டார்மிஜி, இரண்டு மூன்று வாரங்களில் கரோனா பரவல் உச்சத்தை எட்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இந்தோனேசியாவின் மருத்துவ அமைப்பு சீர்குலைந்து விடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தோனேசியா பேரழிவின் விளிம்பில் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு, "இந்தோனேசியா அவசரமாக மருத்துவ பராமரிப்பு, கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். புதிய பாதிப்புகள் அதிகரித்து நாட்டை கரோனா பேரழிவின் விளிம்பில் விட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாகவும், ஆக்சிஜன் விநியோகம் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்த கூட்டமைப்பு, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைக்க உலகளாவிய நடவடிக்கைக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 270 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தோனேசியாவில் இதுவரை 5 சதவீதம் பேருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.