ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக அமெரிக்கா ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அமெரிக்க படைத்தளத்தில் உள்ள வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ராணுவ தளம் மட்டுமே சிறிது சேதமடைந்தது என்றார்.
இதனைத்தொடர்ந்து ஈரானின் அத்துமீறல்களை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. உள்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் பயங்கரவாதத்தை வளர்த்து வரும் ஈரானை உலக நாடுகள் தனிமைபடுத்த வேண்டும் என்று கூறிய அவர், ஈரானுக்கு எதிராக ராணுவத்தையும் ஏவுகணைகளையும் பயன்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை என தெரிவித்தார்.