டெஸ்லா விண்வெளி நிறுவனத்தின் உரிமையாளரும், அண்மையில் ட்விட்டர் வலைத்தளத்தை விலை கொடுத்து வாங்கி அதை நினைத்தபடியெல்லாம் மாற்றிக்கொண்டிருப்பவருமான எலான் மஸ்க் தற்போது மனித வடிவம் கொண்ட ரோபோக்களை வெளியிட்டுள்ளார்.
டெஸ்லா நிறுவனம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ தளத்தில் 'டெஸ்லா ஆப்டிமஸ்' என்ற மனித வடிவிலான ரோபோக்களை பற்றிய செயல்பாடுகளை வெளியிட்டுள்ளது. ஐந்து முதல் ஆறு அடி அங்குலம் உயரம் கொண்ட மனித வடிவிலான இந்த ரோபோக்கள் 56 கிலோ எடை கொண்டது. இவை கொடுக்கப்படும் வேலைகளைத் திறம்பட செய்து முடிக்கிறது.
பல்வேறு உலக நாடுகளின் சிறு சிறு அம்சங்களும் இந்த ரோபோக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியன் டச் ஆக இந்த ரோபோவில் சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 'நமஸ்தே' என்றால் 'வணக்கம்' வைக்கவும், நடராஜா ஆசனா, விருட்சாசனா ஆகிய இரண்டு ஆசனங்களையும் செய்து காட்டுகிறது. 2021 ஆம் ஆண்டு டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரோபோக்களின் செயல்பாடுகளை தற்பொழுது டெஸ்லா அறிமுகப்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக மனிதர்கள் ஒரே விதமான போர் அடிக்கும் வேலையைச் செய்வதைத் தவிர்க்கவே இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.