அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனம் தயாரித்த "அப்பாச்சி ஹெலிகாப்டர்" (APACHE ATTACK HELICOPTER) இந்திய விமானப் படையிடம் (INDIAN AIR FORCE- IAF) இன்று ஒப்படைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமெரிக்கா அரசிடம் "அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்" 22 வாங்க ஒப்பந்தம் செய்தது. இதை உலகளவில் விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான போயிங் நிறுவனம் (BOEING) தயாரித்துள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டரை அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் இருநாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் இந்த ஹெலிகாப்டரின் புகைப்படத்தை இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து வசதிகளுடன் உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டரை அமெரிக்காவிடம் இருந்து பெரும் முதல் நாடு என இந்தியா விமானப்படை தெரிவித்துள்ளது. அதே போல் இந்திய விமானப்படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இந்த ஹெலிகாப்டரை இயக்குவது குறித்த பயிற்சியை அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அமெரிக்காவிடம் வாங்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர் பராமரிப்பு பணியை அமெரிக்கா போயிங் நிறுவனமே மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் இந்திய விமானப்படை அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பெற்றதன் மூலம் தனக்கென்று தனி முத்திரையை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் போர் காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டரை அமெரிக்கா ராணுவம் அதிக அளவில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.