பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கும் சில ராட்டின விளையாட்டுகள் அடிவயிற்றில் 'பக் பக்' எனும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட விளையாட்டுகளில் சிலர் பங்கேற்கவே தயங்குவர். இதற்கான அறிவுறுத்தல்களை கொடுக்கும் விதமாக சில விளையாட்டுகளில் இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணி பெண்கள் பங்கேற்கக் கூடாது என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் இப்படிப்பட்ட பொழுதுபோக்கு ராட்டின விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவை அந்தரத்தில் பழுதாகி நின்றால் எப்படி இருக்கும். அப்படி ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் 'ஏரோ360' என்ற ஒருவகை ராட்டினத்தில் சுற்றுலாப் பயணிகள் ஏற்றப்பட்டனர். அந்த ராட்டினம் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்தரத்தில் தலைகீழாக நின்ற நிலையில் பழுதடைந்தது. அதனையடுத்து பூங்கா ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தரத்தில் சிக்கிக் கொண்டு சுற்றுலாப் பயணிகள் கத்தி கூச்சலிடும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது.