பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.
இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று (30-01-24) இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கை இன்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி இருவரும் குற்றவாளி என்று கூறி இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்ததோடு, இருவரும் 10 ஆண்டுகளுக்கு அரசு பதவிகள் வகிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிபர் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு தற்போது பரிசுபொருட்கள் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை என மொத்தம் 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.