பாகிஸ்தானிலுள்ள கராச்சி பகுதி சிந்து மாகாணத்தில் உள்ளது. அந்த பகுதியை சிந்து மாகாணம்தான் நிர்வகித்தும் வருகிறது. அண்மையில், சிந்துவிடம் இருந்து கராச்சியின் நிர்வாகத்தை எடுக்க பாக்.அரசு அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்த பரிசீலிப்பதாக பாகிஸ்தான் சட்ட மந்திரி பரோக் நசீம் சமீபத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் முழுவதும் சமூக வலைதளங்களில் இந்த விஷயத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொது மக்கள் இன்றி பல அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலதரப்பினரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் எதிரோலியாக #SindhRejectsKarachiCommittee "மற்றும்" #UnitedSindhUnitedPakistan "போன்ற ஹேஷ்டேக்குகள் பாகிஸ்தானில் வைரலாகி உள்ளன.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி கூறும்போது, "இந்தியாவுக்கு எதிராக ஒரு கதையை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது, இதற்கிடையில் கராச்சி விவகாரத்தில் இதனை செய்து உள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நீங்கள் ஒரு கதையை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். அவர் அரசியலமைப்பற்ற முறையில் காஷ்மீரைக் கைப்பற்றினார். அதே நேரத்தில் நீங்கள் கராச்சியை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறீர்கள். இது வினோதமானது" என கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பலர் இது ஒரு மோசமான தந்திரம், இப்படி நடந்தால் பாகிஸ்தான் நான்காக பிரியும் என்று அரசாங்கத்தை எச்சரித்து பதிவிட்டு வருகின்றனர்.