கடந்த மாதம் 14 ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையியல் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுவதற்குள் இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இந்தியாவில் தேர்தல் முடியும் வரை நம்மை சுற்றியுள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும். தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடியின் நிர்வாகம் நம்மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து விதங்களிலும் நாம் தயாராக இருக்கிறோம்" என கூறியிருக்கிறார்.