கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பல முனைகளில் இருந்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், கனடாவை அமெரிக்காவில் இணைப்போம் என்ற ரீதியில் பேசி ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சிக்கலை ஏற்படுத்தினார்.
இது குறித்து டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்ததாவது, ‘கனடாவிற்கு ஆண்டுக்கு 10 கோடி டாலர் மானியம் ஏன் வழங்குகிறோம் என்று யாராலும் பதிலளிக்க முடியாது? பல கனடா மக்கள், கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் வரி மற்றும் இராணுவப் பாதுகாப்பில் பெருமளவில் சேமிப்பார்கள். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவியில் இருந்து கவிழ்க்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக முக்கிய கூட்டணிக் கட்சி தெரிவித்துள்ளது. ட்ரூடோ கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது படுகொலைக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால், இந்தியா - கனடா உறவு இடையே தூதரக ரீதியாக விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் குடிபெயர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலை காரணமாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அந்நாட்டில் உள்ள பலரும் கோரிக்கை வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.